Tuesday, July 3, 2007
ரஷியாவில் மருத்துவம், பொறியியல்
தமிழக மாணவர்கள் ரஷியாவில் மருத்துவம், பொறியியல் படிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து தென்னிந்தியாவிற்கான ரஷிய கூட்டமைப்பின் தூதர் வி.அந்தோனி கூறுகையில், ஆண்டு தோறும் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான மாணாக்கர்கள் உயர் கல்வி பெற ரஷியாவிற்கு வருகிறார்கள். அவர்கள் போலி தரகர்களிடம் ஏமாறுவதை தடுக்க சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தை அணுகலாம்.
அங்கு அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கும். ரஷியாவில் 42 மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில வழியிலோ அல்லது ரஷிய மொழியிலோ கற்கலாம்.
ஆங்கிலமொழியில் கற்க 10 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அங்கு படிக்க வரும் படி தமிழக மாணவர்களை அழைக்கிறோம். மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்ட படிப்புகள் படிக்கலாம் என்று அவர் கூறினார்.
இதை தொடர்ந்து சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் ரஷியாவில் என்ன படிக்கலாம் என்ற கண்காட்சி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் பேசுகையில், ரஷ்யாவில் உயர் கல்வி படிக்க ஆண்டிற்கு தங்கும் விடுதி, சாப்பாடு செலவு கல்வி கட்டணம் அனைத்தும் சேர்ந்து 3 ஆயிரம் அமெரிக்க டாலர் முதல் 6 ஆயிரம் டாலர் வரை செலவாகும். அதாவது ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகும். குறைந்த பட்ச கட்டணம் 1 லட்சம் ஆகும்.
படிப்பும் அங்கு தரமாக உள்ளது. எனவே மாணவர்கள் தாராளமாக ரஷியாவில் படிக்கலாம். இதற்கான ஒப்பந்தம் தமிழக அரசின் அனுமதி பெற்று முறைப்படி கையெழுத்தாக உள்ளது.
இதேபோல ரஷ்யாவில் பொறியியல் படிப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்ய உள்ளது என்று மீர் முஸ்தபா உசேன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment