பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனை யோட்டத்தில் ஒரு புதிய கதவைத் திறந்தார் சார்லஸ் டார்வின். குரங்கின் அடுத்த நிலை மனிதன் என்று உடலளவில் சொல்லி நிறுத்தினார்.
''மேற்கத்திய சிந்தனை புறத்தோற்றத்தோடு நின்றுவிடக் கூடியது. ஆன்ம நிலையில் பசுவின் அடுத்த படிநிலை மனித உயிராக மலர்கிறது என்பது டார்வினுக்குத் தெரியாது'' என்கிறார் ஓஷோ. இது குறித்து முன்னரே வேறொரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.
ஆனால், நமது சமயமரபில், மனித மனத்திற்கான குறியீடாகக் குரங்கு பயன்படுகிறது. யாரையும் கடுஞ்சொல் சொல்லியறியாத கருணைத் திருவுருவமாகிய வள்ளள்பெருமான், ''மனமென்னும் பேய்க்குரங்கு மடப்பயலே'' என்று சொல்கிறார்.
அவருக்கு முன்னோடிகளாய் வாழ்ந்த அருளாளர்களும் மனதின் ஆட்டத்தை சுட்டுவதற்கான குறியீடாகவே குரங்கைப் பயன் படுத்துகிறார்கள். இயற்கை வர்ணனைபோல் தொனிக்கிற இடங்களில் எல்லாம் அவர்கள் மனத்தின் இயல்பையே சுட்டுகிறார்கள்.
வள்ளலார் திருஞானசம்பந்தரைத் தனது ஞான குருவாகக் கருதி வழிபட்டார். திருஞானசம்பந்தர் திருவையாற்றில் உள்ள இறைவனைப் பாடிய பதிகத்தில் இந்தப் பாடல் மிகவும் பிரபலமானதுதான். ''புலன்கள் கலங்கி, அறிவு அழிந்து ஐயம்மேலிட்டு, உயிர் நீங்கிவிடும் நேரத்தில் ''அஞ்சேல்'' என்று அருள் செய்யக்கூடிய ஆதி சிவனின் கோவில் இது. இந்தக் கோவிலை, மயிலுக்கு நிகரான அழகுடைய பெண்கள் வலம்வந்து நடனமாடுவார்கள். அப்போது ஆலயத்திலுள்ள முழவு ஒலிக்கும். பெண்களின் நடனத்தை மயிலின் நடனமென்றும், முழவோசையை இடியோசையென்றும் கருதி குரங்குகள் பதறி மரத்தின் மீது ஏறி, மழை வருகிறதா என்று பார்க்கிற திருவையாறு இது'' என்கிறார் திருஞான சம்பந்தர்.
''புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டு ஐமேல் உந்தி
அலமந்த போதாக 'அஞ்சேல்' என்று அருள்செய்வான்
அமரும் கோவில்
வலம்வந்த மடவார்கள் நடமாட, முழவதிர,
மழையென்று அஞ்சி
சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும்
திருவையாறே'' என்பது அந்தப் பாடல்.
பாடலின் முதல் இரண்டு அடிகள், மரணத் தறுவாயில் வந்து ஆட்கொள்ளும் பரமனை மட்டும் பேசவில்லை. அறிவு அழியும் விதமாகவும், புலன்கள் கலங்கும் விதமாகவும், இகவாழ்வை நிலையான தென்று நம்பி அதிலேயே தன்னைத் தொலைத்து விட்ட உயிரின் தடுமாற்றத்தையும் உணர்த்துகிறது.
பெண்களின் ஒயிலான நடனத்தை மயிலாட்ட மென்றும், முழவோசையை இடியோசையென்றும் தவறாகக் கருதுகிற குரங்கு மழைவருமோ என்று தடுமாறுகிறது. உலக மாயையை உண்மையென்று கருதும் மனக்குரங்கும் அப்படித்தான் தடுமாறுகிறது.
உலக வாழ்க்கையை வகைதொகை தெரியாமல் வாழ்ந்து, அகப்பட்டு விழிப்பவர்களைப் பார்த்துப் பட்டினத்தாருக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வருகிறது. நாவே பிளந்து போகும்படி பொய்பேசி, பணம் சேர்த்து, நல்ல குணங்களே இல்லாத பெண்ணை மணந்து, கணக்கு வழக்கின்றி, புற்றீசல் போல் பிள்ளைகளைப் பெற்று, அந்தப் பிள்ளை களைக் காப்பதற்கும் வழிதெரியாமல், அவர்களை சொந்தக் காலிலும் நிற்க விடாமல் தவிக்கிற மனிதர் களைப் பார்க்கிறார் பட்டினத்தார். ஆப்புக்குள் வா(கா)லை நுழைத்ததோடு அந்த ஆப்பையும் அசைத்து அகப்பட்டுக்கொண்ட குரங்குதான் அவர் நினைவுக்கு வருகிறது.
நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலென கலகலென பிள்ளைகளைப் பெறுவீர்;
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்;''
என்று கிண்டல் செய்வதோட பட்டினத்தார் நிற்கவில்லை.
''ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்குதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே''
என்று கை கொட்டிப் பரிகசிக்கிறார்.
அருளாளர்களின் கவிதைகளில் எல்லாம் குரங்கின் ஆட்டம், மனம் படுத்தும் பாட்டின் குறியீடாகவே இருப்பதைப் பார்க்கலாம். முழுக்க முழுக்க இயற்கை வர்ணனை போல் தெரிந்தாலும் உள்ளுறையாக வேறொன்றைச் சொல்லும் அழகாக பாடல்கள் பதினோராந் திருமுறையில் ''திருஈங்கோய் மலை எழுபது'' என்னுந் தொகையில் காணக் கிடைக்கின்றன.
நக்கீர தேவநாயனாரால் பாடப்பட்டது 'திருஈங்கோய் மலை எழுபது'. சங்ககால நக்கீரரும் இவரும் ஒருவரல்லர் என்பது அறிஞர்கள் சிலரின் கருத்து. சிவபெருமானுக்குரிய மலையான திருஈங்கோய்மலை பற்றிய அழகான பாடல்கள் இவை. இந்தத் தொகையில் குரங்குகள் போடுகிற ஆட்டத்திற்கு அளவேயில்லை.
அந்த மலையில் ஒரு மாமரம். அதிலே கனிகள் கனிந்து காற்றில் அசைகின்றன. கீழே பளிங்குப் பாறைகள் உள்ளன. பாறையில் கனியின் பிம்பம் தெரிகிறது. அது ஒரு முட்டாள் குரங்கின் கண்களில் படுகிறது. ''அங்கே பார் மாம்பழம்'' என்கிறது. உடனே எல்லாக் குரங்கு களும் பாய்ந்து சென்று, பழத்தை எடுப்பதற்காக அந்தப் பளிங்கை நகங்களால் பிராண்டுகின்றன. தன் திருமேனியில் நாகங்களைப் பொருத்தமாக சூடியிருக்கும் சிவபெருமானுக்குரிய மலையில் தான் இந்தக் கூத்து என்பதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.
கல்லாக் குரங்கு பளிங்கில் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி � வல்லே
இருந்(து)உகிரால் கல்கிளைக்கும் ஈங்கோயே, மேனி
பொருந்தலைராய் பூண்டான் பொருப்பு.
மேனியில் பொருத்தமாகப் பாம்புகளைச் சூடியிருக்கிறான் பெருமான். பாம்பு, குண்டலினி ஆற்றலின் குறியீடு. தனக்குள் இறைத் தன்மையின் நிறைத்தன்மையை உணர்ந்தவன் ஈசன். அவனது அருளெல்லைக்குள்தான் நாம் இருக்கிறோம். ஆனால் நம் மனமாகிய குரங்கு நமக்குள் கனிந்திருக்கும் நமச்சிவாயக் கனியை நேராகப் பற்றாமல், அதனை எங்கெங்கோ தேடுகிறது.
நிஜத்தை நிமிர்ந்தும் பாராமல் பிம்பத்தைப் பறித்தெடுக்கும் முயற்சி தானே மனக்குரங்கின் இயல்பு.
நிமிர்ந்தும் பாராமல் பிம்பத்தைப் பறித்தெடுக்கும் முயற்சிதானே மனக் குரங்கின் இயல்பு.
''ஒன்றுகண்டீர் இவ்வுலகுக்கு ஒருகனி
நன்றுகண்டாய் அது நமச்சிவாயக் கனி
மென்றுகண்டால் அது மெத்தென்றிக்கும்
தின்றுகண்டால் அது தித்திக்கும்தானே''
என்கிறார் திருமூலர்.
ஈங்கோய்மலைக் குரங்குகள் அத்துடன் நிற்கின்றனவா? இல்லை. ஏதோ ஒரு கனியைச் சாப்பிட்டுவிட்டது ஒரு குரங்கு. அது சாப்பிடக் கூடிய பழம்தானா என்று தெரியவில்லை. குரங்குக்குத் தாகம் தாளவில்லை. கருஞ்சுனை ஒன்றில் கரும்பினும் இனிய தண்ணீர் ஓடுகிறது. இந்தக் குரங்கு அதிலே இரண்டு கை அள்ளிப் பருகுகிறது. கருஞ்சுனை நீரில் குளுமை போதவில்லையாம். கோபித்துக் கொள்கிறது.
''கண்ட கனிநுகர்ந்த மந்தி'' � கண்ணில்பட்ட கனியைத் தின்று தொலைத்துவிடுகிறது குரங்கு. ஒன்று தனக்கு உரியதுதானா என்று தெரியாமலேயே அதனைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதுதானே மனத்தின் இயல்பு.
''கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனையில்
உண்டு, குளிர்ந்தில என்று ஊடிப்போய்''
குளிர்ந்த சுனை நீரில் குளுமை இல்லாமலா இருக்கும்? எதிலும் மனநிறைவு காணாத மனத்தின் இயல்புதான் இதுவும். அந்தக் குரங்கு என்ன செய்கிறது தெரியுமா? கருஞ்சுனையில் ஓடுகிற நீரருந்தி, நிறைவடையாமல், ஈங்கோய் மலை முகட்டில் ஏறி, அங்கே சஞ்சரிக்கும் மேகத்தைச் சற்றே கீறி, அந்தத் தண்ணீரைப் பருகுகிறதாம். நான்கு மறை களுக்கும் முடிவாக இருக்கிறது சிவபெருமானின் மலையில்தான் இதெல்லாம் நடக்கிறது, என்கிறது அந்தப் பாடல்.
கண்ட கனிநுகர்ந்த மந்தி, கருஞ்சுனையில்
உண்டு, குளிர்ந்திலஎன்று ஊடிப்போய் � கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே, நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.
இறைக்கீறி � சற்றேபிளந்து : மறைக்கீறு � மறைக்கு ஈறு
மேகம் உலகையே குளிர்விக்கும் மகத்துவம் வாய்ந்தது. உலகம் முழுமைக்குமான வேட்கையைத் தீர்க்கிற மேகத்தை, ஒரு குரங்கு கீறி, தன்னுடைய தாகத்தை தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்துகிறது. அந்தக் குரங்குதான் நம் மனக்குரங்கின் மூதாதை! உலக உயிர்களின் வினைகளைக் கழுவும் கருணைமா முகிலாகிய கடவுளை, சின்னச்சின்ன உலகியல் தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்து, அற்ப விஷயங்களிலேயே நிறைவைத் தேடுகிறது மனம். இது மேகத்தைக் கீறி தாகம் தணித்துக் கொள்கிற காரியம் தான்.
இப்படி நமக்குள் இருக்கும் நிறைய குரங்கு களை நமக்குக் காட்டுகிறது ''திருஈங்கோய்மலை எழுபது''.
Monday, July 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment