Monday, July 16, 2007

மேட்டூர் நீர்மட்டம் 100 அடி

மேட்டூர்

பருவ மழையின் கருணையினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஜூலை 15 அன்று மாலை 5 மணியளவில் 100 அடியை எட்டியது. இந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம், 100 அடியைத் தொடுவது இதுவே முதன்முறை.

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பின. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இவ்வாறு, அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததையொட்டி அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வந்தது. அதைத் தொடர்ந்து ஜூலை 15 அன்று மாலை 5 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 115 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இந்த ஆண்டு (2007) ஜனவரி மாதம் 2ஆம் தேதி 100 அடிக்குக் கீழே சென்றது. இதனை அடுத்து ஜூலை 15 அன்று மீண்டும் மேட்டூர் அணை 100 அடியை எட்டிப் பிடித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டினாலே குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதலில் கூறிய தமிழக அரசு, பின்னர் ஜூலை 25 அன்றுதான் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவித்தது. இதனால் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்படும்; உடனே தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்தார். ஆயினும் தமிழக அரசு இந்த வேண்டுகோளை ஏற்கவில்லை. நீர்வரத்து தொடர்ந்து இதேபோல இருந்தால் இன்னும் சில தினங்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: