Monday, July 16, 2007

சத்யராஜூக்கு டாக்டர் பட்டம்


பெரியார் படத்தில் நடித்த பிறகு சத்யராஜின் அடையாளமே மாறிவிட்டது. தமிழக அரசு அவருக்குப் 'பெரியார்' விருது வழங்கி கெளரவித்தது. இப்போது சத்யபாமா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சத்யராஜ், இசையமைப்பாளர் தேவா உள்பட 4 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை இஸ்ரே தலைவர் மாதவன்நாயர் வழங்கினார்.

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 16ஆவது பட்டமளிப்பு விழா, ஜூலை 11 அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் முன்னிலை வகித்தார். இளநிலை படிப்பை முடிந்த 1,134 மாணவ- மாணவிகளுக்கும், முதுநிலை பட்ட படிப்பை முடித்த 1,185 பேருக்கும் விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கலையுலகில் சேவை செய்ததற்காக நடிகர் சத்யராஜூக்கும், ஒவ்வொரு துறையிலும் சேவை செய்த வகையில் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இசைமைப்பாளர் தேவா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சத்யராஜ் விழாவில் பேசியதாவது:

பெரியார் படம் நடித்துக்கொண்டு இருக்கும் போதே எனக்கு தமிழக அரசு சார்பில் 'பெரியார்' விருது வழங்கப்பட்டது. அதை என் வாழ்க்கையில் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தற்போது முதல் முறையாக புரட்சித் தலைவர் தொடங்கி வைத்த பல்கலைக்கழகத்தில் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன். என்னை டாக்டராக பார்க்க என் அம்மா ரொம்ப ஆசைப்பட்டார்கள். அவர்களின் கனவு இன்று நிறைவேறியுள்ளது. ஒரு வகையில் நானும் டாக்டர் ஆகி விட்டேன். பெரியார் படம் வந்த பிறகு எனக்குத் திருப்பு முனை வந்துள்ளது.

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

No comments: