Monday, July 16, 2007

பரண் வாசம்

வீட்டுப் பரணைச் சுத்தம் செய்வது விபரீத ஆசைகளில் தலையாயது. விவேகிகள் அன்றைய தினங்களில் மட்டுமாவது கூறாமல் சந்நியாசம் கொள்வர். எக்கச்சக்கமாய்ச் சிக்கிக் கொண்டவர்களும் சிரமம் இன்றிச் சிவலோகப் பிராப்த்தி பெறுவர். ஒன்றுமில்லாவிட்டாலும் குறைந்தபட்சம் திரிசங்கு சொர்க்கத்திற்காவது கொடுப்பினை உண்டு.

விடுமுறை நாட்களுக்கும் ஆபரேஷன் வீட்டுப் பரணுக்கும் பத்துப் பொருத்தம். பல ஜென்ம பந்தம். கெழீஇய நட்பு. விட்டகுறை தொட்டகுறை. இன்னும் வேறு என்னவெல்லாமோ. இது போன்ற எக்குத்தப்பான ஏதோவொரு அபாயகரமான ஆசையோடு பொழுது புலரும் யாம் செய்த தவத்தால் என்று புரிந்து தான் நாட்காட்டிகள் விடுமுறை நாட்களைச் செவ்வண்ணத்தில் செதுக்கிக் கொண்டுள்ளன. இருந்த போதிலும் க்யா பிரயோஜனம்? ஊழ்வினை உருத்து வந்து ஊட்ட விட்டம் நோக்கி விடு ஜ�ட்.

தூணிலும் துரும்பிலும் இருக்கும் பரமன் பரணிலும் இருப்பானோ? இல்லையென்றால் இரணியன் ஏமாந்தான். அப்படி பரமன் பரணிலும் இருக்கும் பட்சத்தில் பாதி வேலையை அவரிடம் வாங்கி விடலாம் என்றால் அன்றைய நாட்களில் அவரும் நாட் ரீச்சபிள். ஒருவேளை அவர் நான்பரண்வாசியோ? அவர் கிடைப்பதில்லையோ இல்லை டவர் கிடைப்பதில்லையோ! பரண் சுத்தம் செய்யும் தினங்களில், பரண்மேல் நின்று ஆதிமூலமே என்றால் ஆகாயத்திலிருந்து அம்பேல் என்று பதில் வருகிறது. பிரகலாதனைப் பார்த்தால் கேட்க வேண்டும். எது எப்படியோ, அட்டாளி சுத்தம் செய்யப் புறப்பட்டு அதைப் பாதியிலேயே கைவிட்டவர்கள் முகத்திலும் நாலைந்து நாட்களுக்கு நரசிம்மப் புன்னகை நகராமல் இருக்கும்.

வீட்டுப் பரணைக் கண்டு பிடித்தவர் யார் என்று கேட்டுப் பாருங்கள். வினாடி வினாப் பிரியர்கள் கூட விக்கித்துப் போய் விடுவார்கள். பரணைக் கண்டுபிடித்த கட்டிடக் கலை வல்லுனரை பரணில் கட்டி, இல்லை உரலில் கட்டி உதைக்க வேண்டும். குடும்பம் நடத்திக் குப்பை கொட்டித் தரையில் நடக்கும்போது தடுமாறி விழுவது போதாமல் கூரைக்குக் கீழே குறுக்கும் நெடுக்குமாக நிரந்தரக் குப்பைத் தொட்டிகளைக் கட்டி நிமிர்த்த ஒரு பிரகஸ்பதிக்குக் தோன்றி இருக்கிறது பாருங்கள்! பழயன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையாமே! என் வீட்டில் கழிந்த பழயன எங்கேயும் போகவில்லை. போகியன்று போக்கியவை போக எஞ்சியவை பரணில் தஞ்சம். உங்கள் வீட்டில் எப்படியோ தெரியாது. என் வீட்டில் பரணும், பரணில் வீடுமாய் இரண்டறக் கலந்தேதான் காட்சியளிக்கின்றன.

மொஹஞ்சதாரோ ஹாரப்பா காலக் கட்டிடங்களுக்கும் பரண்கள் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. அகழ்வாராய்ச்சி யாளர்களும் இதுபற்றிப் புகழ்ந்து பேசி மூச்சு விடக் காணோம். அன்றும் பரண்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. கூரையில்லாத வீடு கூட சாத்தியம். ஆனால் பரணில்லாத வீடு ம்ஹ�ம் நோ சான்ஸ். பரண்கள் இருந்திருக்கும். பரண்கள் மட்டுமாவது இருந்திருக்கக் கூடும். நமது முன்னோர்கள் அவரவர் வீட்டு அட்டாளிகளில் அடச்சே என்று அள்ளி வீசிய உடைந்த, ஒடுங்கிய, விரிசல் கண்ட, விட்டு போன ஈயம் பித்தளை ஓட்டை உடைசல் பேரீச்சம் பழப் பொக்கிஷங்களைத் தான் கொத்தியெடுத்து கலைக் கருவூலங்களில் காப்பாற்றி வருகிறோம் என்பது என்கணிப்பு. அகழ்வாராய்ச்சியில் அகப்பட்ட சட்டி பானை தட்டு முட்டுச் சாமான் களைப் பார்க்கும்போது முகம் தெரியாத என் முன்னோர்கள் மீது எனக்குச் சகதாபம் பொங்குகிறது. அவர்களுக்கும் எனது பிரச்சனை தான் போல இருக்கிறது. நானும் பொருட்களைப் பொருட்படுத்துகிறேன். பொருட்கள் என் வரை ஜடங்கள் அல்ல. நினைவுகள். நினைவுகளாக உயிர்வாழும் நபர்கள். இடங்கள். சம்பவங்கள்.

புதிய நினைவு புகுதலைப் பற்றி ஒன்றும் இல்லை. பழைய நினைவைக் கழிப்பதைவிட நினைவில் கழிவது சுகமாக இருக்கிறதே, என்ன செய்ய? அன்றும் பரண்களைச் சுத்தம் செய்யப் பணிக்கப்பட்டிருப்பார்கள் பாட்டனார்கள். அவர்களை விரட்டி வேலை வாங்கியிருப்பார்கள் பாட்டிமார்கள்.

வீட்டுப் பரண்கள் குப்பைத் தொட்டிகளைப் போலக் காட்சி தந்தாலும், வீட்டுப் பரண் ஒரு குடும்ப ஆல்பம். வாழ்க்கை கைநாட்டு வைத்த நினைவுக் காசோலை. வெற்றிகரமான திருமண வெள்ளி விழாக்களின் வேர்களும் விழுதுகளும் வீட்டுப் பரண்களில் ஓடிப் படர்ந்திருக்கும். உள்ளங்களின் நெருக்கத்தையும் உறவுகளின் பெருக்கத்தையும் கணிக்க வீட்டுப் பரண்கள் போதுமானவை. பாட்டிகளைப் போலவே பரண்களும் கதை சொல்லிகள். காது கேட்பவர்கள் பாக்கியவான்கள். பரண் பெற்றார் வரம் பெற்றார்.


வீடு பூசும் நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பரண் தனது மௌனத் தவம் கலைக்கும். விக்ரமாதித்த வேதாளம் போலப் புதிது புதிதாகப் புனைந்து கதை சொல்லும். வினோதமான உலகங்களைக் காட்டும். ஒன் டூ த்ரி சொல்லி ஒளிந்து கொண்டு தேடிப் பார்க்கும் விளையாட்டுகள் பரண்களால் படைக்கப்பட்டவை.

நவராத்திரி துவங்கும் மஹாளய அம்மாவசை அன்று பாட்டி பரண் பார்க்க எங்களை அனுமதிப்பாள். ஒரு கால் ஊனமான ஏணியைச் சுவரோரமாகச் சாய்த்து பிடித்துக் கொண்டு பாட்டி நிற்க, தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டுபேர் மட்டும் அட்டாளிமேல் ஏறுவோம். ஈரிழைத் துண்டால் மூக்கைக் கட்டிக் கொள்ளும் முஸ்தீபுகள் பலமாக இருக்கும். ''கை பத்திரம், தேள் கீள் இருந்து கொட்டித் தொலைக்கப் போறது... நாளும் கிழமையுமாக'' என்று பாட்டியின் குரல் அசரீரி போல் மோட்டுவளையில் மோதி பரண் முழுவதும் பரவும்.

பரண்மேல் ஒரு கள்ளிப் பலகைப் பெட்டி உண்டு. பாண்டோராஸ் பாக்ஸ். அதற்குள் எல்லாம் இருக்கும். எல்லாம் என்றால் எல்லாமே எல்லாம். கள்ளிப் பலகைப் பெட்டி மூடியைத் திறக்கவே மூச்சைப் பிடித்துக் கொண்டு முக்கி முனக வேண்டும். க்ரீச் க்ரீச் என்று மௌனம் கலைபட்ட கோபத்தில் பெட்டி முனகும். தாத்தா உயிரோடு இருந்த வரை இது, இந்தக் காலப்பெட்டகத்திறப்பு அவருக்குப் பாத்யதையானதாம். அப்பா, சித்தப்பா பெரியப்பாக்கள் யாரும் அன்று பொழுது சாயும்வரை கண்ணிலேயே தென்பட மாட்டார்களாம். வேளா வேளைக்குக் கொட்டிக் கொள்ளக்கூட வரமாட்டார்களாம். ஓட முடியாமல் சிக்கிக் கொள்வது தாத்தாவும் அத்தைமார்களும் தானாம்.

இதையெல்லாம் எங்களிடம் சொல்லும்போது பாட்டி நினைவுகளை நிகழ்வுகளாக மாற்றிக் காட்டுவாள். அவள் மொழியில் அந்தப் பெரியக் கள்ளிப் பலகைப் பெட்டிக்குப் பெயர் மகாபாரதம். அம்மா அதைப் பாற்கடல் என்பாள். நல்லதும் கெட்டதுமாக நாலும் இருக்கும் அதற்குள் என்பாள்.

மகாபாரதத்திற்குள் கொலு பொம்மைகளும் சாமான்களும் இருக்கும். சின்னாளப் பட்டுப் புடவைக் கிழிசல்களுக்குள் பொதிந்து கட்டிச் சுவாசம் முட்டி தவித்தபடி பொம்மைகள் இருக்கும். பொம்மைகளில் பத்து இருபது பாட்டியின் பிறந்த வீட்டுச் சீதனமாம். ஒன்று கூட உருப்படியாகத் தேறாது. மூக்கு உடைந்து, தலை தனியாகக் கழன்று போய் கைகால் சிதைந்து, இது எதுவும் பாட்டியின் கண்களுக்குப் புலப்படாது. எடுக்க எடுக்க எங்கிருந்து தான் வருமோ தெரியாது வந்து கொண்டேயிருக்கும். இரண்டு பேர் கள்ளிப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுக்க, ஏணிப்படியில் நின்றபடி ஒருவர் வாங்கிக் கொள்ள, கீழே நின்றபடி பாட்டி ஏதோ கோவில் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வதைப் போல சிரத்தையோடு பெற்றுக் கொள்வாள், பொம்மை களை, நினைவுப் பொதிகளை.

எல்லா பொம்மைகளும் இறக்குமதியான பின்பு கள்ளிப் பெட்டியார் கீழே வருவார். எங்களால் எல்லாம் அதை சாதிக்க முடியாது. ''பொம்மனாட்டி களும் கொழந்தைகளும்'' தங்களால் செய்ய முடிந்ததைச் ''செய்து கிழித்த'' பின் அம்மாவாசை போஜனம் உண்ட அலுப்பில் அக்கடா என்று ஏதோ மூலையில் கண் மயங்கும் ஆண் வர்க்கம் அழைக்கப்படும்.

''மெல்ல மெல்ல, கால்லே போட்டுக்காதே! கையை நசுக்கிக்காதே! பாரேன் இத்தனை வருஷமாச்சு! இன்னும் கல்லு மாதிரி அப்பிடியே இருக்கு பாரேன்'' என்று பாட்டி நிறுத்தாமல் பரவசமாக நேர்முக வர்ணனையில் இறங்கி விடுவாள். மகாபாரதம் கீழே வந்தபின் மற்ற சிறிய பெட்டிகளும் இறங்கு முகமாகவும் பின் ஏறு முகமாகவும் இருக்கும்.

சின்னப் பெட்டிகளுக்குள் கலர் காகிதங்களாலும் மணி களாலும் ஜிகினாத் துணிகளாலும் ஆன வண்ணத் தோரணங்கள் பாதி அறுந்தும் கிழிந்தும் கடைசி மூச்சைக் கஷ்டப்பட்டு விட்டபடி சிடுக்கிட்டுக் கிடக்கும். எதையும் எடுத்து வீசப் பாட்டி விட மாட்டாள். பொம்மைகள் எல்லாம் எப்படியோ 'சரியாக்கப் பட்டு' தயாரானவுடன் கள்ளிப் பெட்டிகள் படிக்கட்டுகளாக மாறும். வெள்ளை வேட்டி விரிக்கப்பட்டு கலர் காகிதக் தோரணங்களால் சிங்காரிக்கப் பட்டு நவராத்திரி கொலு தயாராகிவிடும். ஒட்டி வைத்து பொம்மைகளுக்கெல்லாம் ஒன்பது நாட்கள் தான் காலகெடு. மீண்டும் எப்படித்தான் உடையுமோ கிழியுமோ நசுக்குமோ தெரியாது. அடுத்த வருடம் பழந்துணி பந்தோபஸ்துகளையெல்லாம் மீறிய பழயபடியே விரிசலும் விள்ளலும் தான். ஒரு வேளை பாட்டி சொல்வதைப் போலவே பெட்டிக்குள் மகாபாரதமே நடக்குமோ என்னமோ?

அட்டாளியில் எலி உருட்டினாலும், கள்ளிப் பெட்டிக்குள் குருஷேத்திரம் நடப்பதாகக் கற்பனை செய்து கொள்வதும் சாத்தியமாகத்தானிருந்தது. பரணில் கள்ளிப் பெட்டியின் ஏகாதிபத்தியம் கடந்து குஞ்சும் குளுவானுமாக வேறு பிரஜைகளும் பரண்வாசிகளாக இருந்தார்கள். நசுங்கிய வெண்கல உருளி, காதில்லாத இரும்பு வாணலி, கைப்பிடி உடைந்து போன கரண்டி, சட்டுவ வர்க்கம், எதையும் பூட்டாத திறக்காத சாவிகளின் கொத்து, வாய் பிளந்தே கிடக்கும். பூட்டிய வாயைத் திறக்க மறுக்கும் பூட்டுகள், பாச்சை முட்டை நட்புக் கொண்டிருக்கும் பழைய சாமிக் காலண்டர்கள். பெரும்பாலும் வார்னிஷ் பேப்பர் வனப்பில் தங்க ஜரிகை பார்டர் போட்ட பச்சைப்பட்டு புடவையுடுத்து நின்று கொண்டே வீணை வாசிக்கும் சரஸ்வதி, கைகளிலிருந்து காசு கொட்டும் லக்ஷ்மி, விரலெட்டும் தூரத்தில் இருக்கும் வெண்ணெய் கிண்ணத்தை விட்டு விட்டு கால் விரல்களைக் கடவாய்க்குள் திணித்துக் கொண்டு சுவைக்கும் ஆழிலைக் கிருஷ்ணன், ராம பட்டாபிஷேகம் (என்றாவது வசதிப்படும்போது நல்ல தங்க ப்ரேம்போட்டு இந்த தெய்வங்களைத் தனது பூஜை அறை வாசிகளாக்க வேண்டும் என்பது பாட்டியின் ஆசை). குழந்தையாயிருக்கும் போது பெரியப்பா உருட்டிய, இரண்டு சக்கர குழந்தை நடைவண்டி, ஆடுகுதிரையாக அவதரித்துப் பின் வண்ணக் கால்கள் மட்டுமே மிஞ்சிப் போன கல்யாணி, தூளி மாட்டியிருந்த கம்பி வளையம் �பரண் மாயாஜால உலகம்.

பாட்டி தாத்தாக்களின் காலத்திற்கு பிறகு வெண்கல உருள்களும் பித்தளை அண்டாக்களும் விளக்குகளாக மாறி வீட்டிற்கு இரண்டாகப் பாகம் பிரிந்தன. கள்ளிப் பெட்டியும் கொலு பொம்மை களும் யாருக்கும் வேண்டாமல் போயின. உருவமாய் லட்சணமாய் எஞ்சிய நாலைந்து மரப்பாச்சி பொம்மைகளுக்கு மட்டும் பேத்திகள் நடுவில் நான் நீ என்ற போட்டி இருந்தது. பின்னர் அவற்றிற்கும் என்ன கதியானதோ தெரியாது.

இப்போது என் வீட்டுப்பரணில் இருப்பவை இந்தக் காலப் பிரஜைகள். ஓட மாட்டேன் என்று மறுத்து சரி ஓடாது போலிருக்கிறது என்று தைரியமாகப் பிளக்கைச் சொருகி ஸ்விட்சைப் போட்டவுடன் புஸ்வாணமாகப் புகைந்து அடங்கிய ஒரு ஜீம்பூம்பா மிக்ஸி � (எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில்கூட யாருக்கும் வேண்டாமாம். கடை வாசலிலேயே அதன் கழுத்தில் காசைக்கட்டி வைத்தாலும் களவு போகாதாம்), ஏதோ மெட்ரோ ஃபேரில் வாங்கிய சப்பாத்தி மேக்கர் � வீட்டிற்கு வந்து எத்தனை முயன்றும் அது சப்பாத்தி மேக்கவேயில்லை என்பது வேறு கதை, எடுத்துத் தேய்த்தால் பூதம் புறப்படுமோ என்று மிரளவைக்கும் இரண்டு அற்புத விளக்குகள், பேபி வாக்கர், ஆசை ஆசையாக நம் குழந்தை விளையாடி வீசிய பொம்மை மிச்சங்கள் யாருக்கும் கொடுக்க முடியாத, வேண்டாத பொருட்கள். இவை போக நண்டும் சிண்டுமாக 'ஙே' என்று ஞானப் பார்வை பார்த்தபடி பள்ளிக் கூடத்தில் நாம் டீச்சர்களோடு நின்று எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோக்கள், வருடம் தவறாமல் காம்பிளிமெண்ட்டாக வந்த எதுவும் எழுதாத, எழுத மனது வராத டைரிகள் என்றும் எழுதாத பேனாக்கள், காதுபோன வெள்ளெழுத்து கண்ணாடிகள், உடைந்துபோன ப்ளாஸ்க் � இன்னொரு மகாபாரதம்.

எல்லாவற்றையும் வழித்து வீச நேரம் அதிகமாகாது. அவை பயன்படாத பொருட்களாக மட்டுமே பார்க்கப்படும் பட்சத்தில் பரண் சுத்தம் செய்யும் நாட்களில் பரவசமும் பரிதவிப்புமாக ஒவ்வொரு பொருளும் ஏதோ நினைவை இன்னும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இரண்டு வருடம் முன்பு சுத்தம் செய்தபோது மகன் பயன்படுத்திய பால்கிண்டியும் ஸ்ட்ரா டம்பளரும் வாராது வந்த மாமணியாகக் கையில் கிடைத்தன. நினைவுகளைத் தீண்டும் இன்பம் நித்தமுமா கிடைக்கும்?

போன வாரம் பரண் விசிட்டின்போது அட்டைப் பெட்டி ஒன்றினுள் அணில் கூடு கிடைத்தது. அணில் குட்டிகளும், மொத்த குடும்பமும் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போய் விட்டார்கள் போல! ஆனால் கூட்டினுள் என் வீட்டின் பரண் போல ஒரு மகாபாரதம். மணிவைத்த வுல்லன் நாடாக் கண்டுகள், மெத்தென்ற பொம்மை நாய்க்குட்டியின் வெட்டப்பட்ட காதுகள், கால் மிதியின் கலர் கலரான துருவிய துண்டுகள், தேங்காய் நார். அணில் பெற்றோர் பார்த்துப் பார்த்துச் சேர்த்து வைத்த பரண் சொத்து.

என் சந்தேகமெல்லாம் ஒன்றுதான். முதியோர் இல்லங்களில் பரண்கள் உண்டோ? நினைவுகளைத் தூசி தட்டிக் கொண்டு நித்த&...

No comments: