Sunday, July 1, 2007

2010ல் அகண்ட வரிசை பயன்படுத்துவோர் 2 கோடியாக உயரும்!

நமது நாட்டில் அகண்ட அலைவரிசையை பயன்படுத்தி இணையத்தை இயக்குவோர் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டிற்கு 2 கோடியாக அதிகரிக்கும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது!

2006 ஆம் ஆண்டு டிசம்பர் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, நமது நாட்டில் 21 லட்சம் பேர் அகண்ட அலைவரிசை தொடர்பை பெற்றுள்ளனர். இது இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு கோடியாக உயரும் என்று தகவல் தொடர்பு அமைச்சக சிறப்பு அறிக்கை கூறுகிறது.

சாதாரண தொலைபேசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2006 டிசம்பர் கணக்குப்படி 19 கோடியாகவும், செல்பேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 15 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

செல்பேசியை பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாகவே உலகின் 5 முதன்மை செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களான நோக்கியா, மோட்ரோலா, சாம்சங், சோனி எரிக்சன், எல்.ஜி. ஆகியன இந்தியாவில் தங்களுடைய உற்பத்தி தொழிற்சாலையைத் துவக்கியுள்ளன.

இந்த ஆய்வறிக்கையின் படி ஒவ்வொரு 100 பேருக்கும் தற்பொழுது 11.16 பேர் எதாவது ஒரு தொலைத் தொடர்பு கருவியை இந்தியாவில் வைத்துள்ளனர். இது ஆசியாவிலேயே 2வது இடத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்துள்ளது.

2005-06 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு மற்றும் மென்பொருள் ஏற்றுமதி 1,13,725 கோடியாக இருந்தது. 2006-07 நிதியாண்டில் 1,53,300 கோடியாக உயர்ந்துள்ளது. இது 35 விழுக்காடு வளர்ச்சியாகும்.

No comments: