Friday, June 22, 2007

வானிலையால் அட்லாண்டிஸை தரை இறக்குவதில் சிக்கல்!


வானிலையால் அட்லாண்டிஸை தரை இறக்குவதில் சிக்கல்!
வெள்ளி, 22 ஜூன் 2007( 17:51 IST ) Webdunia

விண்வெளியில் ஆய்வை மேற்கொண்ட 7 விஞ்ஞானிகளை சுமந்துகொண்டு பூமியை வட்டமடித்துக் கொண்டிருக்கும் அட்லாண்டிஸ் விண்கலத்தை தரை இறக்குவதற்கு நாசா மையம் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது!

இந்திய வம்சாவழி விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக விண்வெளி நிலையத்தில் ஆய்வை மேற்கொண்டுவிட்டு மற்ற விஞ்ஞானிகளுடன் தரை இறங்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நாசாவிற்கு ஃபுளோரிடாவில் நிலவும் வானிலை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தை ஒட்டியுள்ள இறங்குதளத்தில் நேற்றே அட்லாண்டிஸ் விண் ஓடத்தை தரை இறக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்பகுதியில் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்வதால் தரை இறக்குவது தள்ளிப் போடப்பட்டது.

இந்த நிலையில் பூமியில் இருந்து 360 கி.மீ. உயரத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் அட்லாண்டிஸ் விண்கலத்தை எப்படியும் தரையிறக்குவது என்று பெரு முயற்சி மேற்கொண்டு வரும் நாசா விஞ்ஞானிகள், ஃபுளோரிடாவில் தரையிறக்க முடியாத நிலையில், கலிஃபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில் தரை இறக்க முயன்று வருகின்றனர்.

ஆனால், அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) பலத்த காற்று வீசும் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளதால் தரையிறக்குவது இன்றும் சாத்தியப்படாது போல் தெரிகிறது.

அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.18 மணிக்கு ஃபுளோரிடாவிலோ அல்லது மாலை 6.59 மணிக்கு கலிஃபோர்னியாவிலோ அட்லாண்டிஸை தரையிறக்க முயன்று வருகின்றனர். இவ்விரு இடங்களிலும் இன்று தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டால் நாளை அண்டை நாடான மெக்ஸிகோவில் தரையிறக்க நாசா திட்டம் வைத்துள்ளது.

விண்வெளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வட்டமிடுவதற்குத் தேவையான எரிபொருள் அட்லாண்டிஸில் உள்ளது என்றாலும், சனிக்கிழமைக்குள் தரையிறக்கிவிட நாசா திட்டமிட்டுள்ளது.

ஃபுளோரிடாவில் இறக்காமல் கலிஃபோர்னியாவில் அட்லாண்டிஸை இறக்கும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து அதனை மீண்டும் ஃபுளோரிடாவிற்கு கொண்டு வர 17 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். 10 நாட்கள் ஆகும். இவ்வளவு பிரச்சனைகளை நாசா எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு காரணம் வானிலை, 8,000 அடிக்கும் கீழே மிதக்கும் மழை மேகங்கள் நாசாவிற்கு சவாலாக உள்ளன.

No comments: