Thursday, June 21, 2007

ஆன்மிகம் > அருளுரை


எதற்கும் அஞ்சாதே, எதனையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே : ஸ்ரீ அரவிந்தர்!

எதற்கும் அஞ்சாதே, எதனையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே : ஸ்ரீ அரவிந்தர்!

உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும், துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய், வெற்றியானாலும், தோல்வியானாலும், சாவானாலும், சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய் - தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?

மீண்டும் உனக்குச் சொல்கிறேன், வலிமையுடையவனும், துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும், பலவீனனும் கடவுளை அடைவதில்லை.

வான வீதி எங்கனும் நட்சத்திரங்களைப் பரப்பி வைத்தவனும், மாலை மாலையாக ஞாயிறுகளை கோர்த்து வைத்தவனும் நீயே. இன்று என்னுள் உள்ள உனக்குச் செவி சாய்த்துக் கொண்டிருக்கின்ற நீயே, பழமையான அந்த யோகத்தின் சக்தியால், செயலற்ற மோனத்தில் நிற்கும் இச்சா சக்தியால் நீயே இவற்றைச் செய்தாய். பழமையான யோகத்தின் செல்வனே, ஏறிட்டுப் பார், நடுக்கத்தை விடு, சந்தேகத்தை ஒழி, அச்சமும், ஐயமும், கவலையும் உன்னைத் தீண்டாதொழிக. தனது மூச்சுக் காற்றால் அண்ட கோளங்களை ஆக்கவும், அழிக்கவும் வல்லவன் ஒருவன் உன்னுள் வதிகின்றான் என்பதை மறவாதே.

எல்லா உயிர்களிடத்தும் தன்னையே காண்பவன் எப்படிப் பகைக்க முடியும்? அவன் எதனிடம் இருந்தும் அஞ்சியோ, கூச்சமுற்றோ ஒதுங்குவதில்லை. அவனுக்கு எதனிடத்தும் அச்சமோ, வெறுப்போ கிடையாது. அதோ எல்லா மனிதரும் வெறுத்தொதுக்கும் தொழுநோய் கொண்டவன் - ஆனால் என்னால் அவ்வாறு ஒதுக்க முடியுமோ? கடவுளன்றோ இந்த விநோத வேடம் புணைந்து சிரிக்கின்றான்.

உன்னை வாளால் வெட்டி வீழ்த்துவேன், குண்டுகளால் துளைத்திடுவேன், நெருப்பில் பொசுக்கிடுவேன், பீரங்கி வாயில் வைத்து கொளுத்திடுவேன் என்றா சொல்கிறாய்? நான் வெட்ட முடியாதவன், பிளக்க முடியாதவன், துளைக்க முடியாதவன், எரிக்க முடியாதவன், நான் அசைவற்றவன், நான் அணிந்துள்ள அன்னமய கோசமாம் சட்டையை மட்டுமே உன்னால் கிழிக்க முடியும் - நான் எப்பொழுதும் இருந்தது போலவே இருப்பேன். உன் மீது கோபம் கொள்ளக்கூட மாட்டேன். குழந்தை விளையாட்டில் அல்லது சிறுபிள்ளை கோபத்தில் ஆடையை கிழித்துவிட்டது என்பதற்காக கோபப்படுவார்களோ.

சாதாரண மனிதர்கள் கூட நாயிலும் கழுகிலும், பாம்பிலும் தேளிலும் தங்கள் ஆன்மாவைக் காண்கின்ற, சாவை என் சகோதரனே என்றும், அழிவை என் சகோதரியே என்றும் அனைத்துக் கொள்கின்ற, அதற்கும் ஒரு படி மேலே சென்று சாவும், அழிவும் நாமன்றி வேறில்லை என்றே அழுகின்ற நாள் ஒன்று வந்தே தீரும். "சர்வ பூதேஷு ஆத்மானாம்" என்று மறை சொல்கிறதே.
எனது மனைவி மடிந்துவிட்டாள் என்று அழுவேனா? அவள் எங்கே போய்விட்டாள்? அன்று அவள் உடல் எனது அணைப்பில் இருந்ததற்போலவே இன்றும் என்னுடன் மிக நெருங்கி இருக்கின்றாள். ஏனெனில் அவளது ஆத்மாவும், என்னுடைய ஆத்மாவும் ஒன்றே அன்றோ?
உள்ளது ஒரே ஆத்மாவே என்ற ஞானம் வந்தபோது வேறுபாடுகளெல்லாம் பறந்துபோம். எல்லையற்ற அமைதி, அளக்க முடியாத அன்பு, கரைகாணா கருணை, முடிவற்ற சகிப்புத்தன்மை இவையெல்லாம் கடவுளைக் கண்ட தீரான்மாவின் இயல்பானத் தன்மைகளாம்.
மொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம்வைகறை இதழில் இருந்து.

No comments: