Sunday, August 5, 2007

ஞானி என்பவர் யார்?

'ஒருவர் ஞானியாக என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கிறது ஒரு சாஸ்திர நூல்.

மந்திரத்தாலோ, செப்படி வித்தையாலோ திடீரென வருவதல்ல ஞானம், அது மனதுக்குள் தானாக வரவேண்டும்.

முதலில் படிப்பு வேண்டும். பகுத்து ஆராயும் பகுத்தறிவு வேண்டும். எதையும் ஆராய்ந்து தெளிவு பெறும் திறன் வேண்டும்.

அதோடு, தத்துவத் தேடலும், அதை முழுதாக புரிந்துகொள்வது பற்றியும் தெரியவேண்டும்.

இதன்பிறகுதான் ஒருவர் ஞானியாவது குறித்து யோசிக்க வேண்டும் என்கின்றன ஆன்மீக நூல்கள்.

அவியல்

மதிய உணவுக்கு ஏற்ற பலவிதமான காய்கறிகளைக் கொண்ட அவியல், உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரவல்லது. இதனை செய்வதும் சுலபம்.

இவையெல்லாம் தேவை

கத்தரிக்காய் - 150 கிராம்
முருங்கைக்காய் - 2
வாழைக்காய் - 1
கேரட் -1
பீன்ஸ் - 100 கிராம்
சேனை கிழங்கு - 150 கிராம்
துருவிய தேங்காய் - ஒரு கப்
தயிர் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 5
சீரகம் - ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 50 கிராம்
கடுகு உளுந்தபருப்பு - ஒரு ஸ்பூன்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு

இப்படி செய்யவும்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் அரிந்து வைக்கவும். திடமான அளவு தண்ணீரில் அனைத்து காய்கறிகள் மற்றும் உப்பையும் போட்டு வேகவைக்கவும்.

முக்கால் பதத்துக்கு காய்கள் வெந்ததும், அரைத்த பச்சைமிளகாய் மற்றும் சீரகத்தைக் கொட்டவும். காய் நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.

பின்னர், வாணலியை அடுப்பில் ஏற்றி சமையல் எண்ணெயை ஊற்றவும். கடுகு, உளுந்தபருப்பு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும். பின், அதன்மேல் அரிந்த கொத்தமல்லி மற்றும் தயிரை கொட்டவும். பின்னர் தேங்காய் எண்ணையை ஊற்றி நன்கு கிளறினால் அவியல் தயார்.

உருளைக்கிழங்கு கறி

 காரசாரமாக சாப்பிட விரும்புவோருக்கு உருளைக் கிழங்கு கறி மிகவும் பிடிக்கும். இதை செய்வதும் சுலபம். இதோ அதற்கான குறிப்பு.

இவையெல்லாம் தேவை

உருளைக் கிழங்கு - ஒரு கிலோ
எண்ணெய் - 6 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

இப்படி செய்யவும்

உருளைக் கிழங்கை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும் அதன்பின், உருளைக் கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

உருளைக் கிழங்கு பாதியளவு வெந்ததும், அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர், சிறிது நீரை ஊற்றி நன்றாக வேகவைத்து இறக்கவும்.

மோர் குழம்பு

மிக எளிதில் தயார் செய்யக் கூடியதும், உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதுமானதே மோர் குழம்பு.

இவையெல்லாம் தேவை

மோர் - ஒரு லிட்டர்
செளசெள காய் - 1
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தபருப்பு - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை- சிறிதளவு
சீரகம் - அரை ஸ்பூன்
சமையல் எண்ணெய் -தேவையான அளவு

இப்படி செய்யவும்

செளசெள காயை பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவைக்கவும். பாதியளவு வெந்தபிறகு அரைத்த பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.

காய் நன்கு வெந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். பின்னர் மோரை அதில் கலந்து கறிவேப்பிலை, கடுகு உளுந்தபருப்பு தாளித்து கொட்டவும்.

கோஸ் உருளைக்கிழங்கு கூட்டு

வறுவல்களை விட கூட்டு வகைகளில் சத்து அதிகம். காய்கறிகளை அவிப்பதாலும் பருப்பு சேர்ப்பதாலும் கூட்டுகள் உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. மாறாக காய்கறிகளின் சத்துக்கள் அழியாமல் காக்கிறது.

இதெல்லாம் தேவை

முட்டை கோஸ் - 400 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய்- சிறிதளவு
கடுகு- சிறிது
கறிப்பிலை - சிறிது

இப்படி செய்யவும்

கோஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக விடுங்கள். பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு இரண்டையும் வேக வைத்து முட்டை கோஸ், உருளைக்கிழங்கில் சேர்த்து, தேங்காய் கலவையையும் கொட்டிக் கலக்குங்கள். கடைசியாக கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டுங்கள்.