Wednesday, December 19, 2007
பில்லா - விமர்சனம்
அஜீத்குமார், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான், ஆதித்யா, சந்தானம் நடிப்பில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்யூட் மற்றும் ஐங்கரன் இண்டர்நேஷனல்.
பிரபலமான கடத்தல்காரன் பில்லா. கொலை, கொள்ளை, ஆயுதக் கடத்தல், அவனுக்கு அத்துப்படி. அவனைப் பிடிக்க போலிஸ் வலை விரிக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறான். ஒரு கட்டத்தில் அவனைப் போலிஸ் பிடிக்கப் போகும்போது மோதல் நடக்கிறது. பில்லா இறக்கிறான். ஆனால் அதை மறைத்துவிட்டு டிஎஸ்பி பில்லாவின் பின்னணியைக் கண்டுபிடித்து அவர்களின் ஆணிவேரை அழிக்க நினைக்கிறார். அதற்கு பிக்பாக்கெட்காரன் வேலுவை அவர்கள் கூட்டத்தில் பில்லாவாக நடிக்க வைக்கிறார்.
பில்லாவின் பின்னணி பற்றிய தகவல்கள் தெரியும்போது டிஎஸ்பி சுட்டுக் கொல்லப்படுகிறார். பிறகுதான் தெரிகிறது போலிஸ் கூட்டத்திலேயே பில்லாவின் பின்னணி ஆட்கள் இருப்பது. பில்லாவை இயக்கும் ஜெகதீஷ்தான்... உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத் என்பது தெரிகிறது வேலுவுக்கு. ஆனால் வேலுவைக் கைது செய்து பில்லா என்று நம்புகிறது போலிஸ். வேலு மீள்வதும் பில்லாவின் பின்னணியில் இருக்கும் ஜெகதீஷ் வெளிக்கொண்டு வரப்பட்டு மாள்வதும்தான் க்ளைமாக்ஸ்.
ரஜினி நடித்த பழைய பில்லாவின் ரீமேக்தான் இது. அது அப்போதைய காலக்கட்டத்தில் கலக்கிய படம். புது பில்லா இப்போதைய பிரம்மாண்டத்திலும் தொழில்நுட்பத்திலும் மிரட்டுகிறது.
கதை ஆரம்பிக்கும்போதே பரபரப்பு! துப்பாக்கி முனை துரத்தல்கள் தப்பித்தல்கள் என்று மிரட்டுகிறது. இந்த கத்திமுனை படபடப்பை கடைசிவரை பராமரித்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
அஜீத்துக்கு இரு வேடங்கள். பில்லாவாக பின்னி பெடலெடுக்கிறார் என்றால் வேலுவாக விளாசி வெளுத்து வாங்கியிருக்கிறார்.
அஜீத்தின் தோற்றம் பேச்சு தோரணை பாவனை எல்லாவற்றிலும் ஸ்டைல். அந்த ரஜினியை துளிக்கூட நகலெடுக்காமல் அசலாக அசத்தலாக நடித்திருப்பது சிறப்பு.
எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை முதுகுக்குப் பின்னாலிருந்து இரண்டு துப்பாக்கிகளை எடுத்து விளாசும்போது அஜீத் செய்வது அமர்களம். தன் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயல்பவனை சிரித்துக் கொண்டே காருடன் எரித்துக் கொள்வதும் அவன் காதலி மீது காரேற்றிக் கொள்வதும் கொடூரம். அந்த பில்லாவின் கொடிய முகத்தைக் காட்டும் காட்சிகள். ஒரு கட்டத்தில் போலிஸ் முற்றுகையின்போது பிரபு ரோவாவை விட்டுடு... இல்லாட்டி சுட்டுடுவேன் என்று மிரட்டும்போது துப்பாக்கியை கையில் வச்சிக்கிட்டு சும்மா மிரட்டுனா பில்லாவுக்குப் பிடிக்காது என்று பஞ்ச் கொடுக்கிறார். தோட்டா இல்லாத துப்பாக்கியுடனே தப்பிப்பது பில்லாவுக்குள் இருக்கும் கிரிமினல் மூளையைக் காட்டும் காட்சி. அஜீத்தின் மிரட்டும் நடிப்பு. ஒரு துரத்தல் காட்சியில் காரை சுழன்று சுழன்று சீறவிட்டு சங்குசக்கரமாய் சுழலவைத்து பறப்பது, தலையை கிறுகிறுக்க வைக்கும்போது அஜீத்தின் தில் வெளிப்படுகிறது.
இப்படி பில்லாவின் சாகசங்களை ஓர் அஜீத் கண் முன் நிறுத்துகிறார் என்றால் பிக்பாக்கெட் வேலுவாக வரும் இன்னொரு அஜீத்தும் சளைக்காமல் சாதுர்யம் காட்டுகிறார்.
அந்த ஆறுமுகனுக்கு ஆறுதலை எனக்கு ஒரே தலை என வசனம் பேசி கலகலப்பூட்டுகிறார். பில்லாவாக நிறம்மாறி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
நயன்தாரா, நமீதா இருவருமே இருக்கிறார்கள். நயன்தாரா ஹாலிவுட் கனவுக்கன்னி ரேஞ்சுக்கு கவர்ச்சியில் ஜொலிக்கிறார். உயரமான கட்டடத்திலிருந்து கயிற்றில் தொங்கி சாகசமும் காட்டியிருக்கிறார் நயன். ஆனால் பெரும்பாலும் முகத்தையும் உடைகளையும் இறுக்கமாக வைத்துக் கொண்டே வந்து போவதால் கவர்ச்சி வெளிப்பட்ட அளவுக்கு நடிப்பு வெளிப்படவில்லை. நயன்தாராவில் கவர்ச்சி முன்பு நமீதா காணாமல் போய்விடுகிறார்.
டி.எஸ்.பி. ஜெயப்பிரகாஷாக வரும் பிரபு குறையில்லாமல் செய்திருக்கிறார். உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத்தாக வரும் ரகுமான் நல்ல தேர்வு. அவர்தான் ஜெகதீஷ் என கதை திரும்புவது புது திருப்பம். சந்தேகக் கண்ணுடன் வரும் ஆதித்யா நல்லவர் என்பதும் நல்ல திருப்பம்.
படத்தில் கொடி கட்டிப் பறப்பது அஜீத்தின் ஆட்சி என்பது தெரியும். இன்னொருவர் கொடியும் உயரே பறக்கிறது. அவர்தான் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. படத்தை ஹாலிவுட் படம் போல பளிச்சிட வைத்திருப்பது இவரது கேமராவின் உழைப்பினால்தான்.
மலேசியாவைக் கண்முன் நிறுத்தியிருப்பது, அந்த உயரமான தொங்கு பாலம்... சம்பந்தப்பட்ட காட்சிகள், முருகன் கோவில் காவடியாட்டம் திருவிழா என நீரவ்ஷாவின் கேமரா கோணங்கள் விழிகளை விரிய வைப்பவை.
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் புதுமை உள்ள அளவுக்கு இனிமை இல்லாதது ஒரு குறை. அளவோடு அழகான வசனங்களை எழுதியிருக்கிறார் ராஜ் கண்ணன். பழைய படமென்றாலும் புது மெருகுடன் புது பாலிஷாக - புது ஸ்டைலில் உருவாக்கி இயக்குநர் விஷ்ணுவர்தன் வெற்றி பெற்றுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment